உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரிகளில் சடலங்களை புதைக்க தடை: நீர்வள துறை அதிகாரிகள் புது உத்தரவு

ஏரிகளில் சடலங்களை புதைக்க தடை: நீர்வள துறை அதிகாரிகள் புது உத்தரவு

காஞ்சிபுரம்:ஏரிக்கரை மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இறந்தவர்களின் சடலங்களை புதைக்க, நீர்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர். இதை மீறுவோர் மீது, காவல் துறை உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள்; ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகள் என, மொத்தம் 761 ஏரிகள் உள்ளன.இந்த ஏரிகளில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவமழைக்கு நிரம்பும் தண்ணீரை பயன்படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

விளை நிலங்கள்

இதில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும், 381 ஏரிகளில் கரை மற்றும் நீர்ப் பிடிப்பு பகுதிகளில், ஏராளமான விளை நிலங்கள் உள்ளன.தவிர, இந்த ஏரிகளை ஒட்டி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், தகனமேடையுடன்கூடிய சுடுகாடுகள் அமைக்கப்பட்டு உள்ளன.காஞ்சிபுரம் தாலுகாவில் சிறுவள்ளூர், களியனுார், இலுப்பப்பட்டு, ஏனாத்துார், கூரம், கோவிந்தவாடி; வாலாஜாபாதில் கிதிரிப்பேட்டை, ஊத்துக்காடு, சின்னிவாக்கம், நாயக்கன்குப்பம், சிங்காடிவாக்கம்.ஸ்ரீபெரும்புதுாரில் காந்துார், மதுரமங்கலம், கூத்தவாக்கம்; உத்திரமேரூர், குன்றத்துார் உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் 50க்கும் மேற்பட்ட சுடுகாடுகள், ஏரிக்கரை ஓரம் மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.தவிர, பாலாறு, வேகவதி ஆறு, செய்யாறு ஆகிய ஆற்றங்கரை ஓரங்களில் சுடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எலும்பு கூடுகள்

வட கிழக்கு பருவமழை சமயத்தில், அதிகளவில் வெள்ளம் பாய்ந்தோடும் சமயத்தில், ஏரிக்கரை மற்றும் நீர்ப்பிடிப்பு நிலங்களில் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில், எலும்பு கூடுகள் மிதக்கின்றன.பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய பிரதான ஆற்றங்கரை ஓரம் சுடுகாடுகளிலும் எலும்பு கூடுகள் ஆற்று நீரில் அடித்து செல்லப்படுகின்றன.புதைக்கப்பட்ட சடலங்கள், மழைக்காலத்தில் மிதந்து நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டது.இதை தடுக்க, நீர்வளத் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதான ஏரிக்கரை ஓரங்களில், வரும் காலங்களில் சடலங்களை புதைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக, வாலாஜாபாத் தாலுகாவில், வல்லப்பாக்கம் ஏரிக்கரை ஓரம் எச்சரிக்கை பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.இதில், ஏரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரை பகுதிகளில், இறந்தவர்களின் உடல்களை அடக்கும் செய்தால், காவல் துறையினரிடம் கூறி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

பதாகை

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத நீர்வள துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகளில், ஏரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரை பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கும் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் கூறி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.முதற்கட்டமாக சில ஏரிகளில் மட்டுமே எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளோம். விரைவில் அனைத்து ஏரிகளிலும் எச்சரிக்கை பதாகை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
மே 26, 2025 08:42

ஏற்கனவே புதைத்த இடங்களில் இப்போ ப்ளாட் போட்டு வித்து வீடு கட்டியாச்சு. ஏரில புதைக்கலேன்னா எங்கே புதைக்கிறது? எல்லா பொணத்தையும் எரிக்கச் சொல்லிடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை