வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருக்கையின்றி பயனாளிகள் அவதி
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பி.டி.ஓ., அலுவலகத்தில் பல்வேறு பணிகள் காரணமாக வரும் பயனாளிகள் இருக்கை வசதி இலலாமல் அவதிப்படுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியத்தில், 63 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், அரசு திட்டங்களை பெறவும் உள்ளாட்சி பிரதிநிதி மற்றும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். சிலர், ஒன்றியக் குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க வருகின்றனர். மேலும், சமீபத்தில் ஆதார் சேவை மையமும் பி.டி.ஒ., அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது. அப்பணி சார்ந்தும் பல தரப்பினர் பி.டி.ஒ., அலுவலகம் வந்து செல்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருவோர், தங்களுக்கான பணி முடியும் நேரம் வரை காத்துள்ளனர். அவ்வாறு காத்திருக்கும் பொது மக்களுக்கு வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேவையான இருக்கை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். அலுவலகத்தின் வெளியே வளாகத்தில் நிழலுக்கான வசதி இல்லாததால் அங்கும் சென்று நிற்க இயலாத நிலை உள்ளது. எனவே, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தர துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.