காஞ்சிபுரம்:''பா.ஜ., அரசு என்றால் அடக்குமுறை; அ.தி.மு.க., என்றால் அடிமைத்தனம்; தி.மு.க., என்றால் சமூக நீதிக்கான அரசு,'' என, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், துணை முதல்வர் உதயநிதி பேசினார். தமிழக துணை முதல்வர் உதயநிதி நேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்தார். சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு இல்லத்திற்கு சென்ற அவர், அங்குள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து, நேற்று காலை 11:00 மணிக்கு, தனியார் திருமண மண்டபத்தில் நடந்த, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை சார்பில், 3,846 பேருக்கு பட்டா; பல்வேறு துறை சார்பில், 4,997 பேருக்கு, 253 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, உதயநிதி வழங்கினார். மேலும், 12.44 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒன்பது கட்டடங்கள் திறந்து வைத்தார்; 25.20 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில், உதயநிதி பேசியதாவது: இங்கு வந்திருக்கும் பெண்களின் முகத்தை பார்க்கும்போது, திராவிட மாடல் அரசின் வெற்றியை பார்க்கிறேன். மத்திய பா.ஜ., அரசு என்றால் அடக்குமுறை; அ.தி.மு.க., என்றால் அடிமைத்தனம்; தி.மு.க., என்றால் சமூக நீதிக்கான அரசாக பார்க்கலாம். காலை உணவு திட்டத்தில், 21 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். இத்திட்டம் விரிவாக்கம் செய்யும் விழாவிற்கு வந்த பஞ்சாப் முதல்வர், தங்கள் மாநிலத்திலும் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக தெரிவித்தார். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், மகளிர் உரிமை திட்டம் உள்ளது. இதே காஞ்சிபுரத்தில்தான், முதல்வர் மகளிர் உரிமை திட்டத்தை துவக்கினார். இத்திட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1.73 லட்சம் பேர் உட்பட, 1.15 கோடி மகளிர் பயனடைந்துள்ளனர். பட்டா என்பது பலரின் கனவாக உள்ளது. அரசே நேரடியாக சென்று பட்டா வழங்குகிறது. உங்கள் இடம் இனி உங்களுக்கே சொந்தம். நம் முதல்வர் ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, 15,000 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். ஈ.வெ.ரா., - அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் கருத்துகளை, வெளிநாடுகளில், 'இன்வெஸ்ட்' செய்து வந்துள்ளார். வரும் 2026ல் நடைபெறும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க.,வை தேர்வு செய்வீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர்பேசினார். இவ்விழாவில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, தி.மு.க., விளையாட்டு அணியின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவர் மலர்க்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்.