காஞ்சிபுரம் -- குண்ணவாக்கம் இடையே 20 ஆண்டுக்கு பின் பஸ் சேவை துவக்கம்
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் - குண் ணவாக்கம் இடையே, 20 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேருந்து சேவையை, உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு உட்பட்ட, தடம் எண் - 34சி, பேருந்து, காஞ்சிபுரத்தில் இருந்து, திருப்புலிவனம் வழியாக குண்ணவாக்கத்திற்கு தினமும் ஒரு நடை சென்று கொண்டிருந்தது. இந்த சேவை, நிர்வாக காரணங்களுக்காக, 20 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்டது. பேருந்து சேவை மீண்டும் வேண்டுமென, குண்ணவாக்கம் சுற்றுவட்டார கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, குண்ணவாக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மீண்டும் பேருந்து சேவையை துவக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து கழக துணை மேலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இப்பேருந்து, தினமும் காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, குண்ணவாக்கத்திற்கு, காலை 10:40 மணிக்கு வந்து, மீண்டும் காஞ்சிபுரத்திற்கு செல்லும் என்று, போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.