10 ஆண்டுகளுக்கு பின் வைப்பூரில் சிமென்ட் சாலை
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில் 250க்கும் அதிகமான விடுகள் உள்ளன. இப்பகுதியினர் தங்களின் அன்றாட தேவைக்காகவும், பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் உள்ளிட்டோர் மேட்டுத்தெரு பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.மேலும், பேரிஞ்சம்பாக்ம், கூழாங்கல்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த, ஒரகடம் சிப்காட் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் சென்று வரும் பிரதான சாலையாக இச்சாலை உள்ளது.இந்த நிலையில், 10 ஆண்டுகளாக இந்த சாலை முழுதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால், இச்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், 14.30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சிமென்ட் சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டு, கடந்த வாரம் புதிய சிமென்ட் சாலை அமைத்து சீரமைத்தனர்.