மாநில போட்டிகளுக்கு தேர்வான வீரர்களை வழியனுப்பிய கலெக்டர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2024- - 25ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள், பொது பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி என, 5 பிரிவின் கீழ், 14,498 பேர் பங்கேற்றனர்.அதில் முதல் இடம் பிடித்தவர் மற்றும் குழுப் போட்டிகளில் தேர்வு பெற்றவர்கள் 664 பேர், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.போட்டிகள் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்துார் என, நான்கு மாவட்டங்களில், நேற்று துவங்கி, இம்மாதம் 24ம் தேதி வரை, நடைபெறுகிறது.இதுஒருபுறம் இருக்க, செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டைவூரில் மாநில அளவில் போட்டிகள் நேற்று நடந்தன.இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செல்லும் வீரர், வீராங்கனையருக்கு வாழ்த்துகள் தெரிவித்து, அவர்கள் செல்லும் வாகனத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, விளையாட்டு அரங்கத்தில் நேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.