உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இருளர் குடியிருப்பு கட்டுமான பணிகள்

3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இருளர் குடியிருப்பு கட்டுமான பணிகள்

உத்திரமேரூர்:கடம்பர்கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இருளர் குடியிருப்புகள் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கச்சேரி செய்யாறு கரையோரத்தில், 17 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மழை மற்றும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இருளர் இன மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, கடம்பர்கோவில் கிராமத்தில் இருளர் இன மக்கள் 17 பேருக்கு 2021ல் வீட்டுமனை வழங்கப்பட்டது. இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறை சார்பில், 2022 -- 23ம் நிதி ஆண்டில், பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், தலா 4.37 லட்சம் ரூபாய் மதிப்பில், 17 குடியிருப்புகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன. அதை தொடர்ந்து, குடியிருப்புகள் கட்டும் பணியானது மூன்று ஆண்டுகளாக மந்தமாக நடந்து வருகிறது. அதில், மூன்று குடியிருப்புகளுக்கான கட்டுமான பணி ஆரம்ப நிலையிலே நிற்கிறது. இதனால், இருளர் மக்கள் புதிய குடியிருப்புகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும், ஓலை குடிசை வீடுகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, சிரமப்படுகின்றனர். எனவே, கடம்பர்கோவிலில் குடியிருப்புகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, இருளர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, உத்திரமேரூர் ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடம்பர்கோவிலில் இருளர் இன மக்களுக்கு 17 புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடக்கின்றன. அதில், ஆரம்ப நிலை வரை கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் விரைந்து கட்டி முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை