உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மதகு சேதம்: வெளியேறும் தண்ணீரால் வடக்குப்பட்டு ஏரிக்கரை உடையும் அபாயம்

மதகு சேதம்: வெளியேறும் தண்ணீரால் வடக்குப்பட்டு ஏரிக்கரை உடையும் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அருகே, வடக்குப்பட்டு ஏரியில், சேதமடைந்த மதகு வழியே வெளியேறும் தண்ணீரால், மண் அரிப்பு ஏற்பட்டு ஏரிக்கரை உடையும் அபாயம் உள்ளது. இதனால், 200 குடும்பங்கள் அச்சத்தில் உள்ளனர். குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நீரை பயன்படுத்தி, வடக்குப்பட்டில் 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இந்த நிலையில், குன்றத்துார் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாக விளங்கி வரும் இந்த ஏரியில் உள்ள மதகு சேதமடைந்து, ஏரியில் உள்ள தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகு வழியே தண்ணீர் வெளியேறுவது அதிகரித்து வருவதால், மதகின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மண் சரிந்து வருகிறது. இதனால், ஏரிக்கரை பலவீனம் அடைந்து கரை உடையும் அபாயம் நிலவி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மதகு சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது சேதமடைந்த மதகு வழியே வெளியேறும் தண்ணீரால், ஏரிக்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. ஏரிக்கரை உடைந்தால், அருகில் உள்ள 200 வீடுகள் தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது. சேதமான மதகை அகற்றி, புதிய மதகு அமைக்க வேண்டும் என, படப்பை நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, மூன்று ஆண்டுகளாக பல முறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேதமான மதகில் மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க, மாவட்ட நீர்வாகம் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதகு வழியே வெளியேறும் தண்ணீரால் ஏரிக்கரைக்கு எந்த பாதிப்பும் இல்லை. தண்ணீர் வெளியேறுவதை தடுக்க, சேதமடைந்த மதகில் மணல் மூட்டைகள் அடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை