மழைநீர் கால்வாய் சேதம் ஏனாத்துாரில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழி சாலை, ஆறு வழி சாலையாக விரிவு படுத்தவும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.இதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தங்கள் விடப்பட்டு உள்ளன.மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம், 2022ம் ஆண்டு பணி துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும். அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம், 2019ம் ஆண்டு துவங்கி, 2024 டிச., மாதத்தில் முடிக்க வேண்டும். அடுத்த கட்டமாக, காரப்பேட்டை- - வாலாஜாபேட்டை வரை, 36 கி.மீ., துாரம், 2019ல் துவங்கி 2024 அக்டோபரில் முடிக்க வேண்டும்.கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள், கால அவகாசம் நெருங்கியும் முடிக்கப்படாமல் உள்ளது.குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் கூட்டு சாலையில், மேம்பாலம் கட்டுமான பணிகளை அறவே துவக்கவில்லை. இதுதுவிர, சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலம் கட்டுவதற்கு மாற்றுபாதை அமைத்து விட்டு, மேம்பாலங்கள் கட்டியுள்ளனர்.வாகனங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ப, சாய் தள வசதி ஏற்படுத்தவில்லை. ராஜகுளம், சேக்கான்குளம், ஏனாத்துார், தாமல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோர மழை நீர் கால்வாய் கான்கிரீட், சேதம் ஏற்பட்டு கம்பி நீட்டிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஏனாத்துார் - காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவனை இடையே, மழை நீர் கால்வாய் கான்கிரீட் சேதம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது.இவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.