உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுாரில் நடைபாதையில் திறந்தவெளி மின்வடத்தால் அபாயம்

ஸ்ரீபெரும்புதுாரில் நடைபாதையில் திறந்தவெளி மின்வடத்தால் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், வடிகால் கட்டுமான பணியின் போது தோண்டப்பட்ட மின்வடம், நடைபாதையின் மீது திறந்தவெளியில் போடப்பட்டுள்ளதால், பாதசாரிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், காந்தி சாலை, திருமங்கையாழ்வார் சாலை, தேரடி சாலை உள்ளிட்ட சாலையோரம் ஏராள மான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தேரடி சாலையில் உள்ள ஜெயா மருத்துவமனை அருகே உள்ள கடைகளுக்கு, மின் கம்பத்தில் இருந்து மின்வடம் மூலம், தரையில் புதைக்கப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலைத் துறையினர், இந்த சாலையோரம் வடிகால் கட்டுமான பணிக்காக, நிலத்தில் இருந்த மின் வடத்தை தோண்டினர். வடிகால் கட்டுமான பணி நிறைவடைந்த பின், மீண்டும் மின் வடத்தை முறையாக நிலத்தில் புதைக்கவில்லை. பாதசாரிகள் நடைபாதையின் மீது, திறந்தவெளியில் மின்வடம் ஆபத்தான முறையில் உள்ளது. இதனால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பாதசாரிகள், அச்சத்தில் நடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், மின்வடத்தை பாதுகாப்பாக நிலத்தின் அடியில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !