சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்
உத்திரமேரூர்:உத்திரமேரூரை சுற்றி 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் உத்திரமேரூருக்கு வந்து செல்கின்றனர்.அவ்வாறு வருவோர் உத்திரமேரூர் வழியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு, உறவினர் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு செல்கின்றனர்.அப்போது, பொதுமக்களை வேன், பேருந்து, ஆட்டோ ஆகியவற்றில் ஏற்றிச் செல்லாமல், சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர்.சரக்கு வாகனம் எப்போதும் அதிக வேகத்துடன் செல்லும் என்பதால், சில நேரங்களில் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, போலீசார் தரப்பில் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இதை மதிக்காமல், சமீப நாட்களாக உத்திரமேரூரில் சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.எனவே, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிச் செல்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.