திருமுக்கூடல் வேளாண் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் சுற்றி புல்லம்பாக்கம், வயலக்காவூர், மதூர், சித்தாலப்பாக்கம், அருங்குன்றம், பழவேரி, சீத்தாவரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராம விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் சாகுபடி செய்வதற்காக, நெல் விதைகள் மற்றும் உரங்களை திருமுக்கூடலில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்தில் பெறுகின்றனர். திருமுக்கூடல் துணை வேளாண் விரிவாக்கம் மையத்திற்கான கட்டடம், கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இதனால், போதுமான இடவசதி இல்லாமல், விவசாயத்திற்கான விதைகள் மற்றும் உர மருந்துகள் வைத்து பராமரிக்க இயலாத நிலை இருந்து வருகிறது. இதனால், திருமுக்கூடலில் உள்ள துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு சொந்தமாக கட்டட வசதி ஏற்படுத்த சுற்றுவட்டார கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, திருமுக்கூடலில் புதிய கட்டடம் கட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்தாண்டு ஜூலையில் பணி துவங்கியது. பணி முழுமையாக நிறைவு பெற்று, எட்டு மாதங்களை கடந்தும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. கட்டடத்தை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருமுக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, உத்திரமேரூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி கூறியதாவது:திருமுக்கூடல் துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கான கட்டடப் பணி நிறைவு பெற்றது. எனினும், வேளாண் துறைக்கு ஒப்படைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.