உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துார்ந்து போன சோமங்கலம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார கோரிக்கை

துார்ந்து போன சோமங்கலம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார கோரிக்கை

குன்றத்துார்,:சோமங்கலம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குன்றத்துார் தாலுக்காவில் சோமங்கலம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி அப்பகுதியில் 400 ஏக்கருக்குமேல் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த ஏரி துார்ந்து போய் உள்ளது. இதனால் மழை காலத்தில் ஏரி விரைவாக நிரம்பி, உபரி நீர் கலங்கள் வழியே வெளியேறி வீணாகிறது. மேலும், ஏரியின் மேற்புறம் பகுதியில் அதிக அளவில் ஆக்கிரமிக்கும் பணிகள் நடக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சோமங்கலம் பெரிய ஏரிக்கு மழை காலத்தில் அதிக நீர்வரத்து உள்ளது. இதனால், மழை காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஏரி முதலில் நிரம்புகிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இந்த ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க நீர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் மழை பொழிவு அதிகமாக உள்ளதால் தண்ணீர் எடுக்கும் திட்டம் கிடப்பில் விடப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் சோமங்கலம் ஏரி உள்ளதால் இந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி ஆழப்படுத்தினால் எதிர்கால சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தலாம். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏரியின் ஆக்கிரமிப்புகளை துவக்கத்திலேயே அகற்றி ஏரியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !