பராமரிப்பு இல்லாத அனுமீஸ்வரர் கோவிலை சீரமைக்க பொற்பந்தல் பக்தர்கள் கோரிக்கை
உத்திரமேரூர்:பொற்பந்தல் கிராமத்தில் உள்ள அனுமீஸ்வரர் கோவில் பராமரிப்பு இல்லாததால், சீரமைக்க வேண்டும் என,. பக்தர்ககள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் தாலுகா, பொற்பந்தல் கிராமத்தில், சுந்தரவல்லி சமேத அனுமீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.இங்கு, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இந்த கோவில் வளாகத்தில் விநாயகர், முருகன், விஷ்ணு ஆகிய உபசன்னிதிகள் உள்ளன.தற்போது, இக்கோவில் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கோவில் விமானம் சேதமடைந்து, அதன் மீது மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன.மேலும், கோவில் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், இங்கு வரும் பக்தர்கள் கோவிலை சுற்றிவர முடியாத நிலை உள்ளது.வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்டவை நடமாடுவதால், பக்தர்கள் அச்சத்துடன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.எனவே, பொற்பந்தல் அனுமீஸ்வரர் கோவிலை சீரமைக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.