குப்பையில் இறைச்சி கழிவை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இருந்து புக்கத்துறை செல்லும் நெடுஞ்சாலையில் நெல்வாய் கூட்டுசாலை உள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலையில், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.இந்நிலையில், இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரத்தில் பல நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. அப்பகுதியில் வசிப்போர் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பையை, வாகனங்களில் கொண்டு வந்து அப்பகுதியில் போட்டு செல்கின்றனர்.இது மட்டுமின்றி அங்குள்ள கடைகளில் இருந்து இறைச்சி, உணவு கழிவை வியாபாரிகள் கொட்டுகின்றனர். இதனால், குப்பை குவியல்களில் இருந்து துர்நாற்றம் வீசி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:நெடுஞ்சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பொதுமக்கள் நெடுஞ்சாலையோரத்தில் குப்பையை கொட்டி வருகின்றனர்.தற்போது, நெல்வாய் கூட்டு சாலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.