உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாங்காடு தற்காலிக நுாலகத்தில் இடவசதி இல்லாததால் அதிருப்தி

மாங்காடு தற்காலிக நுாலகத்தில் இடவசதி இல்லாததால் அதிருப்தி

மாங்காடு: மாங்காடில், போதிய இட வசதி இல்லாத இடத்தில் கிளை நுாலகத்தை மாற்றியதால் வாசகர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். குன்றத்துார் - பூந்தமல்லி சாலை, மாங்காடு பேருந்து நிலையம் அருகே 40 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் கிளை நுாலகம் இயங்கியது. தினமும் 200க்கும் மேற்பட்டோர், நாளிதழ் மற்றும் புத்தகங்களை படித்து வந்தனர். நுாலகத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அதை இடித்து, அதே இடத்தில் தரை, முதல் தளம் என 3,000 சதுர அடியில் 85 லட்சம் ரூபாயில் புதிய நுாலகம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, மாங்காடு சிவானந்தா நகர் பூங்காவில் உள்ள சிறிய கட்டடத்தில், ஒரு மாதத்திற்கு முன் நுாலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காலை 9:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி வரை செயல்படுகிறது. இந்த கட்டடத்தில் இடவசதி இல்லாததால் புத்தகங்கள் மூட்டை கட்டி போடப்பட்டுள்ளன. இதனால், வாசகர்கள் இங்கு புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. வாசகர்கள் கூறிய தாவது: மாங்காடு பேருந்து நிலைய பகுதியில் இயங்கிய நுாலகத்தை 2 கி.மீ., தொலைவில் போக்கு வரத்து வசதியே இல்லாத சிவானந்தா நகர் பூங்காவில் இடமாற்றம் செய்துள்ளதால், வாசகர்களால் அங்கு செல்ல முடியவில்லை. மேலும், அங்கு இடவசதியும் இல்லை. புதிய நுாலக கட்டடம் கட்டி முடிக்கும் வரை, இடவசதியுடன் கூடிய கட்டடத்தில் நுாலகத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். நுாலகர் கூறுகையில், 'கட்டுமான பணி ஆறு மாதங்களில் முடிந்து விடும். அதுவரை வாசகர்கள், எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chitrarasan subramani
அக் 27, 2025 10:49

பழைய நூலகத்திற்கும் தற்காலிமாக இயங்கும் நூலகம் அமைந்துள்ள சிவானந்தா நகர் பூங்கா 500மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது. மேலும் புதிய இடம் என்பதால் வாசகர் வருகை குறைவாக உள்ளது.இது தான் உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை