செடிகளால் மறைந்துள்ள வழிகாட்டி பலகை அவளூர் சாலையில் தடம் மாறும் வாகன ஓட்டிகள் அவளூர் சாலையில் தடம் மாறும் வாகன ஓட்டிகள்
வாலாஜாபாத்:அவளூர் கூட்டுச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 10 கிராமங்களுக்கான வழிகாட்டி பலகை, செடிகளால் மறைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் வழி அறிய முடியாமல் தடம் மாறி செல்லும் நிலை உள்ளது.வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாலம் வழியாக, அவளூர் கூட்டுச்சாலை செல்லும் சாலை உள்ளது. இக்கூட்டுச்சாலையில் இருந்து, கணபதிபுரம் வழியாக இளையனார்வேலுாருக்கும், கண்ணடியன்குடிசை வழியாக அங்கம்பாக்கத்திற்கும் சென்றடையும் சாலை உள்ளது.அதேபோன்று, அவளூர் வழியாக, ஆசூர், களக்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் மற்றொரு சாலை உள்ளது.இதனால், இச்சாலை வழியாக முதன்முறையாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், அவளூர் கூட்டுச்சாலையை வந்தடையும் போது எந்த சாலை எங்கு பிரிந்து செல்கிறது என்பதை அறிய முடியாமல் தவிக்கும் நிலை இருந்தது.இதை போக்கும் விதமாக ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அவளூர் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் பகுதியில், சாலையோரம் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.அதில் 10 கிராமங்களுக்கான வழி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழிகாட்டி பலகை பராமரிப்பு இல்லாமல் தற்போது செடிகளால் மறைந்து காணப்படுகிறது.இதனால், வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடம் மாறி செல்லும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.எனவே, அவளூர் கூட்டுச்சாலையில் அமைத்துள்ள வழிகாட்டி பலகையை மறைத்துள்ள செடிகளை அகற்றி, அனைவரும் அறியுமாறு வழிவகை ஏற்படுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.