உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாம்புதூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

மாம்புதூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

உத்திரமேரூர்:மாம்புதூரில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் ஒன்றியம், சின்னாளம்பாடி ஊராட்சியில், மாம்புதூர், மெய்யூர் ஓடை, சின்னாளம்பாடி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள, மாம்புதூர் கிராமத்தில் நெல் அறுவடை நேரங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். அதன் மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வந்தனர். தற்போது, இப்பகுதியில் சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை, மாம்புதூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைத்துள்ளனர். ஆனால், சொர்ணவாரி பருவத்திற்கான நெல் கொள்முதல் நிலையம் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக குவியல்களாக சேர்த்து வைத்துள்ளனர். சில தினங்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால், நெல் மழையில் நனைந்து சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, மாம்புதூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து, நெல்லை கொள்முதல் செய்யக்கோரி, விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் ஒன்றியத்தில், அடுத்த வாரத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் மாம்புதூரிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை