வறண்டு வரும் பழையசீவரம் பாலாற்று தடுப்பணை குவிந்துள்ள மணலை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் பாலாற்றின் குறுக்கே, 2020ல், 42 கோடி ரூபாய் செலவில் நீர்வளத் துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில், வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன்கூடிய ஷட்டர் மற்றும் துணை பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இதன் வாயிலாக இந்த தடுப்பணை நிரம்பினால், பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.மணல் தேக்கம்
இந்த தடுப்பணை கட்டப்பட்டதை தொடர்ந்து, பருவ மழை காலங்களில் அணை நிரம்பி வழிகிறது. மழை காலங்களில் பாலாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், தண்ணீரோடு மணல் அடித்து வந்து தேக்கமாகிறது.இவ்வாறு ஆண்டுதோறும் தேக்கமான மணலால் தற்போது அணை உயரத்திற்கு மணல் சேர்ந்து மேட்டு பகுதியாக உள்ளது. இதனால், பருவ மழை காலம் மட்டுமின்றி, கோடைகால மழை, தென்மேற்கு பருவ கால மழை போன்ற மழை நேரங்களிலும் ஆற்றில் பெரிய அளவிலான நீர் வரத்து இல்லாமலே இத்தடுப்பணை நிரம்பி விடுகிறது.விவசாயம் பாதிப்பு
ஆறு அடி உயரத்திற்கு கட்டப்பட்ட இப்பகுதி பாலாற்று தடுப்பணையில், மணல் நிரம்பி உள்ளதால், ஒரு அடி ஆழமான உயரம் கூட இல்லாமல், தண்ணீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால், மழைக்காலத்தில் குறைவான தண்ணீரே தடுப்பணையில் சேகரமாகி, கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னதாகவே அத்தண்ணீர் வறண்டு போகும் நிலை உள்ளது.இதனால், இப்பகுதி பாலாற்றில் தடுப்பணை இருந்தும், கோடையில் நீர்த்தேக்கம் இல்லாததால், அணை வாயிலாக விவசாயத்திற்கு முழு பலன் கிடைக்காத நிலை உள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.எனவே, பழையசீவரம் பாலாற்றில் அணை உயரத்துக்கு குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.