மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும் அன்றாடம், 70 டன் மேலாக குப்பை சேகரித்து அகற்றப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை மட்கும் குப்பை, மட்காத குப்பை இரு வகையாக பிரிக்கப்பட்டு, மட்காத குப்பைகளை சிமென்ட் கம்பெனிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும். மட்கும் குப்பையை உரமாக்க வேண்டும். ஆனால், இந்த குப்பையை சரிவர கையாளாததால், நத்தப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில், ஏக்கர் கணக்கில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.மலை போல் காட்சியளிக்கும் குப்பை கிடங்கில் அவ்வப்போது திடீரென ஏற்படும் தீ விபத்து அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது.நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்து, பல இடங்களில் பரவியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கொண்டு சென்று அணைத்தனர். 2022 ம் ஆண்டிலும், குப்பை கிடங்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுதும் புகை மூட்டமாக காட்சியளித்ததால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்தது.குப்பை கிடங்கில் உள்ள குப்பையை பயோமனிங் செய்து, முறையாக அகற்றி அந்த இடத்தை மீட்க வேண்டும். ஆனால், குப்பையை தரம் பிரிப்பதிலும், அவற்றை கையாள்வதிலும் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என, கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நத்தப்பேட்டையில் உள்ள குப்பையை அகற்றி நிலத்தை மீட்க வேண்டும் என, திருக்காலிமேடு சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.