உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் மக்களின் மருத்துவ மேம்பாட்டிற்கு... 100 தேவைகள்!:அரசிடம் பட்டியலிட்டது மாவட்ட சுகாதார குழு

காஞ்சிபுரம் மக்களின் மருத்துவ மேம்பாட்டிற்கு... 100 தேவைகள்!:அரசிடம் பட்டியலிட்டது மாவட்ட சுகாதார குழு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, டிஜிட்டல் எக்ஸ் -- ரே, காசநோய் கண்டறியும் இயந்திரம், நடமாடும் பல் மருத்துவ குழு உள்ளிட்ட, 100 வகையான மருத்துவ தேவைகள் இருப்பதாக பட்டியலிட்டு, மாநில சுகாதார பேரவைக்கு, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கான தேவைகளை, சுகாதாரத் துறையினர் அவ்வப்போது கேட்டு நிறைவேற்றி வருகின்றனர்.

குற்றச்சாட்டு

ஆனாலும், மருத்துவமனைகளில் போதிய கட்டட வசதி, உபகரணங்கள், இருக்கைகள், மருத்துவ பொருட்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. இதனால், மாவட்ட அளவில் சுகாதார பேரவை என்ற பெயரில் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பட்டியலிட்டு, மாநில சுகாதார பேர வைக்கு அனுப்ப சுகாதாரத் துறை உத்தரவிட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் சமீபத்தில் சுகாதார பேரவை நடத்தப்பட்டது. அதில், மாவட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளின் தேவைகளை, சுகாதாரத்துறை அதிகாரிகள் பட்டியிலிட்டனர். அதாவது, மாவட்ட அளவிலேயே முடித்துக் கொள்ளக்கூடிய சிறிய தேவைகள் தவிர்த்து, மாநில அரசு செய்து கொடுக்க வேண்டியவற்றை பட்டியலில் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி, கட்டடம், டிஜிட்டல் எக்ஸ் - ரே, புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறக்காவல் நிலையம் என, 100 வகையான மருத்துவ தேவைகள் பட்டியலிடப்பட்டு, மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முடிவு செய்யப்படும்

இதன்பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடக்கும் மாநில சுகாதார பேரவை கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட தேவைகள் குறித்து விவாதித்து, அவற்றில் எவற்றை எல்லாம் வழங்க வேண்டும் என, முடிவு செய்யப்படும். அதன்படி, அடுத்தடுத்து தேவையானவை வழங்கப்படும் அல்லது செய்து தரப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னுரிமை இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செந்தில் கூறியதாவது: மாநில சுகாதார பேரவை கூட்டத்தில், நாங்கள் அனுப்பியுள்ள தேவைகள் பட்டியல் பற்றி ஆலோசிப்பர். அவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டியவற்றை, விரைவாக வழங்க முற்படுவர்.

மற்ற தேவைகள்

பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் நிறைவேற்றப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தேவையான மருத்துவ உள்கட்டமைப்புகள் குறித்தே, மாநில சுகாதார பேரவைக்கு அனுப்பியுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கோரிக்கைகள் என்னென்ன? பரிந்துரை செய்யப்பட்டுள்ள தேவைகளில் சில : 52 துணை சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் பரந்துார் வட்டார மருத்துவமனைக்கு, 'டிஜிட்டல் எக்ஸ்ரே' கருவி வழங்க வேண்டும் திம்மராயன்பேட்டை, காரை, குண்ணவாக்கம், தண்டலம், கருவேப்பம்பூண்டி மற்றும் குண்ணவாக்கம் துணை சுகாதார நிலையங்களில், போர்வெல் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நடமாடும் பல் மருத்துவ குழு வேண்டும் மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு தடுப்பூசி வாகனம் வேண்டும் மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல நுழைவு வாயில் பாலம் வேண்டும் கூரம், கீழ்பேரமநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பேருந்து வசதி வேண்டும் வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை வேண்டும் சின்னையன்சத்திரம், வரதராஜபுரம், இரண்டாம் கட்டளை, கொளப்பாக்கம், சிக்கராயபுரம், மற்றும் ஆதனுார் உள்ளிட்ட ஆறு இடங்களில், புதிதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில், 24 மணி நேரம் செயல்படும் புறக்காவல் நிலையம் வேண்டும் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் சுற்றுசுவரை உயர்த்தி கட்ட வேண்டும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், புறநோயாளிகள் பிரிவுக்கு தனி கட்டடம் கட்டித்தர வேண்டும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தலைக்காய விபத்து சிகிச்சை பிரிவு துவக்க வேண்டும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில், போதிய மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, காசநோயை கண்டறியும் இயந்திரம் வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட, 100 வகையான மருத்துவ உள்கட்டமைப்பு தேவைகளை, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். மொத்த தேவைகளில், 30க்கும் மேற்பட்டவற்றை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையே கேட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை