உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போலீசாரின் வாகன தணிக்கையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போலீசாரின் வாகன தணிக்கையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் போலீசாரின் வாகன தணிக்கைக்கு பயந்து, பினாயூர் மலைவழிச் சாலையிலேயே கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், மதுார், சிறுதாமூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், பழவேரி மற்றும் பினாயூர் மலை சாலை வழியாக பழையசீவரம் பாலாற்று பாலத்தை கடந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயங்குகின்றன. இந்நிலையில், வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் பழையசீவரம் உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறல் தொடர்பான வாகனங்கள் குறித்து போலீசார் அடிக்கடி வாகன தணிக்கை மேற்கொள்கின்றனர். இதனால், குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயங்கும் கனரக லாரிகளை வாகன ஓட்டிகள், பினாயூர் மலை வழிச்சாலையிலேயே நீண்ட நேரம் நிறுத்தம் செய்து தணிக்கை முடிந்ததன் பிறகு வாகனங்களை மீண்டும் இயக்குகின்றனர். குறிப்பாக, மாலை 6:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை திருமுக்கூடல் பாலாற்று பாலம் அடுத்த பினாயூர் சாலையில் கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நெரிசலில் சிக்கி மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, பினாயூர் சாலையில் நெரிசலை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை