உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கணக்குக்காக நடத்தப்படும் அரசு விழிப்புணர்வு பேரணிகள்

 கணக்குக்காக நடத்தப்படும் அரசு விழிப்புணர்வு பேரணிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் நடத்தப்படும் அரசு விழிப்புணர்வு பேரணிகள் பல, கணக்குக்காக நடத்தப்படுவதாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு துறைகள் சார்பில், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றிய விபரங்களை மக்களிடம் கொண்டு செல்ல அடிக்கடி விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்படுகின்றன. மதுவிலக்கு, குடும்ப கட்டுப்பாடு, தேர்தல் விழிப்புணர்வு, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு, பாலின பாகுபாடு விழிப்புணர்வு, ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு என பல வகையில் விழிப்புணர்வு பேரணிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கப்படும் இந்த பேரணியில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களோ அல்லது கல்லுாரி மாணவர்களோ பங்கேற்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கப்படும் இந்த பேரணி, நகரின் முக்கிய சாலைகளில் சென்று, அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், கலெக்டர் அலுவலகத்திலிருந்து சில தெருக்கள் துாரமே சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகம் திரும்பும் பேரணிகள் காஞ்சிபுரத்தில் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக, கலெக்டர் வளாகத்தில் துவங்கிய பேரணி, கலெக்டர் வளாகத்திலேயே சுற்றிக்கொண்டு மீண்டும் அரசு அலுவலகங்களை நோக்கி சென்ற சம்பவங்கள் பல உள்ளன. பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் இந்த பேரணிகள், காந்தி சாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் வீதி, நான்கு ராஜவீதிகள் பக்கம் செல்வதே இல்லை. விழிப்புணர்வு பேரணிகள் பல கணக்குக்காக அரசு துறை அதிகாரிகள் நடத்துவதாக விமர்சனங்கள் எழுகின்றன. நகரின் முக்கிய சாலைகளின் இந்த பேரணிகள் பயணிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர், அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ