மரங்களில் மீண்டும் விளம்பர பலகை பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலையோரங்களில் நிழல் தரும் வகையில் உள்ள மரங்களில், தனியார் வணிகம், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனத்தினர் ஆணி அடித்து விளம்பர பலகை அமைத்து இருந்தனர்.இதனால், நாளடைவில் மரங்கள் பட்டுபோகும் நிலை உள்ளதால், மரங்களில் ஆணியால் அடித்து வைக்கப்பட்டுள்ள விளம்ப பலகையை, காஞ்சிபுரத்தை சேர்ந்த பசுமை இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர், பல்வேறு தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து இரு வாரங்களுக்கு முன், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள மரங்களில் ஆணியால் அடிக்கப்பட்டு இருந்த 200க்கும் மேற்பட்ட விளம்பர பலகையை அகற்றினர்.இந்நிலையில், விளம்பர பலகை அகற்றப்பட்ட மரங்களில் மீண்டும் ஆணி அடிக்கப்பட்டு புதிதாக விளம்பர பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மரங்களில் ஆணி அடித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையை உடனே அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மரங்களில் ஆணி இருந்த இடத்தில் மஞ்சள் பேஸ்ட் மற்றும் பசுஞ்சாணம் பூச, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.