உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முழு கொள்ளளவை எட்டிய தென்னேரியால் மகிழ்ச்சி

முழு கொள்ளளவை எட்டிய தென்னேரியால் மகிழ்ச்சி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தென்னேரி கிராமம். இக்கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றாக தென்னேரி உள்ளது. 5,345 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரி, 18 அடி கொள்ளளவு கொண்டதாகவும், 7 மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேறக்கூடிய ஐந்து கலங்கல் பகுதிகள் அமைந்துள்ளன. இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், இந்த தண்ணீரை கொண்டு தென்னேரி, தென்னேரி அகரம், மஞ்சமேடு, விளாகம், அயிமிச்சேரி, ஆம்பாக்கம், வாரணவாசி, திருவங்கரணை உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 5,858 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்னேரி ஏரியில், தென்மேற்கு பருவமழை உள்ளிட்ட முன்னதாக பெய்த மழைக்கு, ஏரியில் 13 அடி கொள்ளளவிற்கு தண்ணீர் சேகரமாகி இருந்தது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை பொழிவு காரணமாக, சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், தென்னேரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் ஏரியின் முழு கொள்ளளவு எட்டப்பட்டு, உபரிநீர் வெளியேறும் கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால், தென்னேரி மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ