வேண்பாக்கம் சாலையோரம் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
வாலாஜாபாத்: வேண்பாக்கம் சாலையோரம் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் குவிந்துள்ள குப்பையை அகற்றி சுத்தப்படுத்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாதில் இருந்து, வாரணவாசி, தேவேரியம்பாக்கம் வழியாக, ஒரகடம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில், தென்னேரியில் இருந்து கொளவாய் ஏரி செல்லும் கால்வாய் இணைப்பாக வேண்பாக்கம் அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் அடுத்துள்ள சாலையோரத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளன. வாரணவாசி, வேண்பாக்கம், குண்ணவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கடைகளில் இருந்து வெளியேறும் குப்பை மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன. மலைபோல குவிந்துள்ள இக்குப்பையால் எப்போதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பல்வேறு தொற்றுகளுக்கு வழிவகுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலான குப்பையை அகற்றி சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.