சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர்
காஞ்சிபுரம்,:வங்க கடலில் உருவான, ‛பெஞ்சல்' புயல் காரணமாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு, சென்னை வானிலை மையம், ‛ரெட் அலர்ட்' விடுத்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய துவங்கியது.இதனால், காஞ்சிபுரம் நகரின் பிரதான முக்கிய சாலைகளான காந்தி சாலை, காமராஜர் வீதி, டி.கே.நம்பி தெரு, கிழக்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, மேற்கு ராஜ வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட சாலைகளில், மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.இதில், மழைநீரில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை குவியலால் செங்கழுநீரோடை வீதியில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.இதனால், இரட்டை மண்டபம் சிக்னல் அருகில், நான்குமுனை சந்திப்பில், மழைநீர் குளம்போல தேங்கியது. இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள், கொட்டும் மழையிலும், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை நீக்கி, மழைநீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தினர்.இதேபோல, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள ரங்கசாமிகுளக்கரை, டி.கே.நம்பி தெருவில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் ஏற்பட்ட அடைப்பை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களும் கொட்டும் மழையில் பணிபுரிந்து அடைப்புகளை நீக்கினர்.