மாநகராட்சி லஞ்ச புகார்களுக்கு உடனடி நடவடிக்கை: கமிஷனர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு, புதிய வரி விதிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, வணிக ரீதியிலான கட்டட அனுமதி என, பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.இதுபோன்ற சேவைகளுக்காக, அதிகாரிகளை நகரவாசிகள் அணுகும்போது, லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.இது சம்பந்தமாக நம் நாளிதழிலில் விரிவான செய்தி நேற்று வெளியானது. இதுபோன்ற முறைகேடுகளை குறைக்க, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சேவை குறைபாடு தொடர்பாக தன்னிடம் புகார் அளிக்கலாம் என, கமிஷனர் நவேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பாதாள சாக்கடை பிரச்னை, வரி விதிப்பு, நிர்வாகம் என, பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய முயற்சிக்கிறோம்.மாநகராட்சிக்கு வருவாயை உயர்த்த பலகட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். மாநகராட்சியில் லஞ்சம் வாங்குவதாக எழும் புகார்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வரி விதிப்பு என, எந்த சேவை சம்பந்தமாகவும், நகரவாசிகள் நேரடியாகவோ, மொபைல் போன், வாட்ஸாப் என, 73973 72823 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நகரவாசிகள் தெரிவிக்கும் புகாருக்கு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.