மதுராந்தகம்: வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டதாகும். வடகிழக்கு பருவமழை காரணமாக தற்போது, 11 அடி தண்ணீர் உள்ளது. தற்போது, பர்மா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில், பல மாநிலங்களில் இருந்து நத்தைகொத்தி நாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா, கரண்டி வாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வகைகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கியுள்ளன. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வர துவங்குகின்றன. டிச., ஜன., பிப்., மாதங்களில் வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். மார்ச், ஏப்., மே மாதங்களின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும். அவ்வகையில், நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது என, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வனச்சரக அலுவலகம் அமைந்துள்ளது. சரணாலயத்திற்கு வரும் பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் பறவைகளை புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள், வேடந்தாங்கலில் உள்ள சரணாலயத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கும் வசதி உள்ளது. சரணாலயத்தில் உள்ள விடுதியில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.