வாலாஜாபாத் சாலையில் நெரிசல் அதிகரிப்பு
வாலாஜாபாத்: வாலாஜாபாத் சாலையில் வாகனங்கள் அதிகரிப்பால் இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில், வாலாஜாபாத் உள்ளது. வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பேருந்துகள் அதிகம் இயங்குகின்றன. இந்த நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணி முடிந்து வாகனங்கள் மூலம் வீடு திரும்புகின்றனர். இதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்தும் கனரக வாகனங்கள் மாலை முதல் இரவு வரை வாலாஜாபாத் சாலை வழியாக அதிகம் இயங்குகின்றன. இதனால், வாலாஜாபாத் சாலையில் தினமும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர். குறிப்பாக, வாலாஜாபாத் ராஜவீதி மற்றும் பேருந்து நிலைய சாலையில் நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. எனவே, வாலாஜாபாத் சாலையில், இரவு நேரங்களில் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.