வாராக்கடனை வசூலிக்க வட்டி தள்ளுபடி, 6 மாதம் அவகாசம்...புதுயுக்தி: ரூ.8.20 கோடி நிலுவையை பெற கூட்டுறவு துறை மும்முரம்
காஞ்சிபுரம்':காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 8.20 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. வாராக்கடனை வசூலிக்க அபராத வட்டி தள்ளுபடி செய்வதோடு, கடனை அடைக்க கூடுதலாக ஆறு மாதங்கள் வழங்குவதாக, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. இந்த புதுயுக்தியால், வாராக்கடன் நிச்சயம் வசூலிக்கப்படும் எனவும் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி, அதன் 52 கிளைகள், 53 தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், ஏழு நகர கூட்டுறவு கடன் சங்கம், மூன்று ஊரக வளர்ச்சி கடன் சங்கம், இரண்டு நகர கூட்டுறவு வங்கி, 23 பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் என, 140 கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.இந்த கடன் சங்கங்களின் வாயிலாக, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய, ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள், மகளிர் குழுவினர், தனி நபர் ஆகியோருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது.இந்த கடனுதவி வழங்குவதற்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில், 80 சதவீத மட்டுமே கடனுதவியை, கூட்டுறவு துறை வழங்கி வருகிறது.இந்த கடனை, ஆறு மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என, நிபந்தனையுடன் கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகை திரும்ப செலுத்தாத பட்சத்தில், 3 சதவீத அபராதத்துடன் கூடிய கடன் தொகையை, கூட்டுறவு துறையினர் வசூலித்து வருகின்றனர்.அதன்படி, 2021 - 22ம் நிதி ஆண்டில், 656.02 கோடி ரூபாய்; 2022 - 23ல் 973.53 கோடி ரூபாய்; 2023 - 24ல் 1,108.64 கோடி ரூபாய்; 2024 - 25ல் 1,203.65 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது.இதில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக, 13,130 நபர்களுக்கு, 101.96 கோடி ரூபாய் பயிர் கடன், உரக்கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய கடன் வழங்கப்பட்டு உள்ளது.இந்த கடனை ஆறு மாதங்களில் செலுத்த வேண்டும் என, கூட்டுறவுத் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இருப்பினும், 1,045 நபர்களிடம் 8.20 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. இந்த கடனை வசூலிக்க கூட்டுறவுத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளின் வாயிலாக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயம் செய்து, கடனுதவி அளித்து வருகிறோம்.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 1,045 நபர்களிடம், 8.20 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்க, ஆறு மாதங்களுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. தவிர, தொகை வழங்குவதற்கான அவகாசத்தை ஆறு மாதங்கள் கூடுதலாக வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஒரு விவசாயி கடன் வாங்கினால், ஆறு மாதங்களில் திரும்ப செலுத்த வேண்டும். இதற்கு, 12 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை செலுத்தவில்லை எனில், மூன்று சதவீதம் என, 15 சதவீத வட்டியுடன் கடன் தொகை செலுத்த வேண்டும். தற்போது, ஆறு மாதம் அவகாசத்தை கூடுதலாக வழங்குவதோடு, அபராத வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கடன் தொகை எளிதாக வசூலிக்க முடியும்.- செயலர்,தொடக்க வேளாண் கடன் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
கூட்டுறவு துறையில் வழங்கிய கடன் விபரம்
நிதி ஆண்டு இலக்கு கோடியில் கடன் வழங்கிய தொகை கோடியில்2021- - 22 1,035.90 656.022022- - 23 1,227.19 973.532023- - 24 1,459.83 1,108.642024- - 25 0 1,203.65