74 சத்துணவு உதவியாளர் பணிக்கு இன்று, நாளை இரு தினங்கள் நேர்காணல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 74 சத்துணவு உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, இன்று, நாளை ஆகிய இரு தினங்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி நிர்வாகங்களின் கீழ் பல்வேறு சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன.இதில், 74 சத்துணவு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு, மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இந்த, 74 காலிப் பணியிடங்களுக்கு, 418 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதில், 374 விண்ணப்பங்கள் மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மீதம், 44 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.இந்த சத்துணவு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பித்த நபர்களிடம், இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நேர்காணல் நடைபெற உள்ளது.குறிப்பாக, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய மூன்று வட்டாரங்களுக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இன்று நேர்காணல் நடைபெற உள்ளது.அதேபோல, ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, நாளை, உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்களில் நேர்காணல் நடைபெற உள்ளது.இந்த நேர்காணல் வாயிலாக, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்குமா, அரசியல் செல்வாக்கு இருக்கும் நபர்களுக்கு கிடைக்குமா என, விண்ணப்பதாரர்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது.