சுற்றுப்புற துாய்மைக்கான காயகல்ப விருது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை 2ம் இடம்
காஞ்சிபுரம்:மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பில், சுற்றுப்புற துாய்மைக்கான, 'காயகல்ப' விருதுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 765 படுக்கைகளுடன் தனியார் மருத்துவமனைக்கு இணையாக பல்வேறு சேவையை வழங்கி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் ஹிலாரி ஜோஷிடா நளினி மேற்பார்வையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் தலைமையில், சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது.இங்கு 24 மணி நேரமும் தாய்சேய் நலம், அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு திறம்பட செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் 450 - 500 பிரசவம் நடக்கிறது. இதில், சராசரியாக 300 சுக பிரசவமும், மீதி அறுவை சிகிச்சை பிரசவமும் நடைபெறுகிறது.காது, மூக்கு, தொண்டை, கண், எலும்பு மூட்டு, பொது அறுவை சிகிச்சை, பிரசவ அறுவை சிகிச்சை என, சிக்கலான அறுவை சிகிச்சை என, மாதத்திற்கு, 750க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.மேலும், புற நோயாளிகளுக்கான பிரிவில், பல்வேறு பிரிவு சிகிச்சைக்காக, ஒரு நாளைக்கு 3,000 - 3,500 பேர் வந்து செல்கின்றனர். முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மாதந்தோறும், 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.இந்நிலையில், சுத்தம் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை, நோய் பரவா தன்மை வெளிப்படையான நிர்வாகம் ஆகியவற்றிற்காக வழங்கப்படும் மத்திய அரசின் காயகல்ப விருதினை, தமிழகத்தில் உள்ள 263 அரசு மருத்துவமனைகளில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவனை இரண்டாம் இடத்தை பிடித்து, 10 லட்சம் ரொக்க பரிசை வென்றுள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துமவனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:மத்திய அரசு ஆண்டுதோறும் காயகல்ப விருது வழங்கி வருகிறது. இதில், கடந்த ஆண்டு மூன்றாம் இடம் பிடித்தோம். நடப்பு ஆண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளோம்.வரும் ஆண்டு முதலிடம் பிடிப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். அதற்கேற்ப மருத்துவமனை சுற்றுப்புறத் துாய்மை பராமரித்து வருகிறோம்.மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து மாதம்தோறும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தரப்பட்டியல் வெளியிடுகிறது. இதில் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரண்டு ஆண்டிற்கு மேலாக முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.