உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கரும்புக்கு மாற்றாக நெல் சாகுபடி கரும்பாக்கம் விவசாயிகள் ஆர்வம்

கரும்புக்கு மாற்றாக நெல் சாகுபடி கரும்பாக்கம் விவசாயிகள் ஆர்வம்

கரும்பாக்கம்:கரும்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் கரும்புக்கு மாற்றாக விவசாயிகள், நெல் சாகுபடியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம், அரும்புலியூர், களியப்பேட்டை, சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் கரும்பு சாகுபடி பிரதான விவசாயமாக உள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் ஆண்டுதோறும் வழக்கமாக கரும்பு பயிரிடும் விவசாயிகள் சிலர், நடப்பாண்டு சம்பா மற்றும் சொர்ணவாரி பட்டத்திற்கு நெல் பயிரிட்டு உள்ளனர். இதற்கு, கட்டுப்படியாகாத கரும்பு விலை மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு காரணம் என்றாலும், தற்போது காட்டுப்பன்றிகள் தொந்தரவும் முக்கிய காரணியாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கரும்பாக்கம் விவசாயிகள் சிலர் கூறியதாவது: கரும்புக்கான விலை குறைவாக கிடைப்பது ஒருபுறம் இருக்க, இப்பகுதிகளில் கரும்பு வெட்ட ஆட்கள் தட்டுப்பாடு பிரச்னை பெரிதாக உள்ளது. கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் கண்துடைப்பு செய்வதை அரசு வழக்கத்தில் கொண்டுள்ளது. மேலும், ஆண்டு பயிரான கரும்பு, அறுவடை காலத்திற்குள் இரண்டு அல்லது மூன்று முறை காட்டு பன்றிகளால் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைகள் அதிகரிப்பால் இந்தாண்டுக்கு குறுகிய கால நெல் சாகுபடிக்கு மாறி உள்ளோம். எனவே, கரும்பு சாகுபடியில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வழிவகைகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ