பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
தேனம்பாக்கம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, தேனம்பாக்கத்தில் மன்னாதீஸ்வரர் சமேத பச்சையம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பரிவார சன்னிதிகள் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 13ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.நேற்று, காலை 8:30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை நடந்தது. காலை 9:30 மணிக்கு யாத்ரா தான மஹா சங்கல்பம், பூர்ணாஹூதியும், காலை 10:00 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கும், தொடர்ந்து விநாயகர், மன்னாதீஸ்வரர், பச்சை அம்மன், சப்த முனீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.மதியம் 1:30 மணிக்கு மஹா அபிஷேகமும், சண்டி மற்றும் ருத்ரகலசாபிஷேகமும், பிரசாத விநியோகமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.