மானாம்பதி கோவில் தேர் செய்யும் பணி துவக்கம்
உத்திரமேரூர்:மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோவில் தேர் செய்யும் பணி நேற்று துவக்கப் பட்டது. உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தில் பெரியநாயகி சமேத வான சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலை யத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த கோவிலுக்கு தேர் இல்லாததால், விசேஷ நாட்களில் கட்டுத்தேரை பயன்படுத்தி வந்தனர். இதனால், புதிய தேரை வடிவமைக்க பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, உபயதாரர் நிதியின் கீழ், 92 லட்சம் ரூபாய் செலவில், 36 அடி உயரத்தில் புதிய தேர் செய்யும் பணி நேற்று துவக்கப்பட்டது. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று புதிய தேர் செய்யும் பணியை துவக்கி வைத்தார். உத்திரமேரூர் ஒன்றியக் குழு சேர்மன் ஹேமலதா, ஊராட்சி தலைவர் ராதா, தேர் உபயதாரர் கருணாமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த பணி ஓராண்டிற்குள் முடிக்கப்பட்டு, தேரோட்டம் நடக்கும் என்று கோவில் தக்கார் சரண்யா தெரிவித்தார்.