மாலை நேர மழையால் மா விவசாயிகள் கவலை
அருங்குன்றம்:மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழையால், அறுவடைக்கு தயாரான மாம்பழங்கள் அழுகல் ஏற்பட்டு விற்பனை பாதித்துள்ளதாக மா விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், அருங்குன்றம், பழவேரி, பினாயூர், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்கின்றனர்.இப்பகுதிகளில், கடந்த மாத இறுதியில் மாம்பழம் சீசன் துவங்கிய நிலையில், ஜூலை மாதம் வரை தொடர்ந்து அறுவடை செய்ய விவசாயிகள் எதிர்பாரத்திருந்தனர்.இந்நிலையில், சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் இப்பகுதிகளில் மழை பெய்கிறது. இதனால், அறுவடை செய்து விற்பனைக்கு வைத்திருந்த மாம்பழங்கள் விரைவாக அழுகல் ஏற்பட்டு வீணாவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.இதுகுறித்து, அருங்குன்றம் கிராம விவசாயிகள் கூறியதாவது:பங்கம்பள்ளி, ருமானி, செந்துாரா மற்றும் நீலம் போன்ற வகையிலான மாங்காய் இப்பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்கிறோம். அறுவடை செய்யும் பழங்களை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதி வெளி சந்தைகளில் விற்பனை செய்கிறோம்.கடந்த 10 நாட்களாக மழை பொழிவு மற்றும் ஆந்திரம் மாநிலம் மாம்பழங்களின் வரத்து அதிகம் காரணமாக வெளி சந்தையில் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.பங்கனம்பள்ளி மாம்பழம் மட்டும் குறிப்பிட்ட நேரம் இருப்பு வைக்கப்பட்டு குறைந்த அளவாவது விற்பனை செய்கிறோம். மற்ற வகையான பழங்கள் விரைவாக விற்காததால் அழுகல் ஏற்பட்டு வீணாகிறது.இதனால், இந்த ஆண்டு மா சாகுபடியில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.