மகன் கொண்டு வந்த தீர்மானம் தாய் கையெழுத்திடவில்லை
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், வரவு -- செலவு மற்றும் மேசை தீர்மானம் என, 36 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.இதில், 18வது தீர்மானத்தில் அனுமதி அற்ற மனைப்பிரிவு வரன் முறைப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில், செங்கல்பட்டு நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அறிவுரைபடி செங்கல்வராய நகரின் சாலைகளுக்கு தானப் பத்திரம் பெறப்பட்டுள்ளன.இதை பேரூராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெற, பேரூராட்சி தலைவரின் மகன் தீர்மானமாக கொண்டு வந்துள்ளார். அதை பேரூராட்சி செயல் அலுவலரும், விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், பேரூராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கலாம் என, குறிப்புரையில் தெரிவித்து இருந்தார்.இருப்பினும், பேரூராட்சி கூட்டத்தின் தீர்மான நிறைவேற்றும் விதமாக கையெழுத்து போடும் இடத்தில்,பேரூராட்சி தலைவர் கையெழுத்திடவில்லை.பேரூராட்சி தலைவரின் மகன் கொண்டு வந்த தீர்மானத்தில் பேரூராட்சி தலைவர் கையெழுத்திடாதது கவுன்சிலர்கள் இடையே ஆச்ரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர் சிலர் கூறியதாவது:செங்கல்வராய நகர் வீட்டு மனைப்பிரிவு, நஞ்சை நில வகைப்பாட்டில் உள்ளது. இதை தெரிந்து தான், முன் இருந்த பேரூராட்சி தலைவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. நிலத்தின் வகைப்பாடு தெரியாமல் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தது தவறு தான். அதை தெரிந்து தீர்மானம் நிறைவேற்றமால் இருந்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.