நரசிம்மன்நகரில் மோட்டார் பழுது குடிநீர் தட்டுப்பாட்டால் அவஸ்தை
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி நரசிம்மன் நகர், நல்லதண்ணீர்குளம் பகுதிவாசிகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.இங்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20 லிட்டர் கேன் ஒன்று, 6 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மின்மோட்டார் பழுது ஏற்பட்டு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.இதனால், நரசிம்மன் நகர்வாசிகள், சற்று தொலைவில் உள்ள மல்லிகாபுரம், வேடபாளையம் ஆகிய பகுதிகளுக்கு சென்று, நீண்ட நேரம் காத்திருந்து குடிநீர் பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக, இப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகம் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, சீராக குடிநீர் விநியோகம் செய்ய பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறுகையில், 'குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதடைந்த மின்மோட்டார் சரிசெய்யப்பட்டு, குடிநீர் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்' என்றார்.