சிறுபாலத்தில் தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:திருமங்கலம் கண்டிகையில் சேதமான சிறுபால தடுப்பை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட திருமங்கலம் கண்டிகையில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதுார் ஏரிக்கு உபரி நீர் செல்லும் கால்வாயை கடந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் சாலை வழியே, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். திருமங்கலம் கண்டிகை பகுதியில், உபரி நீர் கால்வாயை கடக்க சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதி தடுப்பு சேதமடைந்து உடைந்து உள்ளது. இதனால், பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்கள் எதிரே வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சேதமான சிறுபால தடுப்பை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.