சிக்னல் மாற்றத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையே, ரயில் வழித்தடம் செல்கிறது. இந்த ரயில் வழித்தடத்தில், மின்சாரம் ரயில், சரக்கு ரயில்கள் செல்கின்றன. இது போன்ற ரயில்கள் கடவுப்பாதை கடந்து சென்றதும், 200 மீட்டரில் ரயில் கேட் திறப்பதற்கு சிக்னல் விழும்.அதன்பின், கேட் கீப்பர் கடவுப்பாதையின் கேட் திறந்து விடுவார். கடவுப்பாதை இருபுறமும் நிற்கும் வாகனங்கள் அதன் பிறகே கடந்து செல்லும்.இதில், காஞ்சிபுரம் கோனேரிகுப்பம் ரயில் கடவுப்பாதையில் இருந்து, 200 மீட்டர் கடந்து செல்லும் போது, கடவுப்பாதை திறக்க சிக்னல் கிடைக்கும். தற்போது, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு ரயில் சென்ற பின் சிக்னல் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதனால், கோனேரிகுப்பம் ரயில் கடவுப்பாதையில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சரக்கு ரயில்கள் கடந்து செல்லும் போது, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.இதை தவிர்க்க முன்பு இருந்ததை போல, கோனேரிகுப்பம் ரயில் கடவுப்பாதையில் இருந்து, 200 மீட்டரில் சிக்னல் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.