தடுப்பு இல்லாத பாலத்தில் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:தடுப்பு இல்லாத வளத்தாஞ்சேரி பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பேரீஞ்சம்பாக்கம் கிராமம் உள்ளது. இப்பகுதியினர் தங்களின் அன்றாட தேவை, வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக பேரீஞ்சம்பாக்கம் பிரதான சாலையை பயன்படுத்தி, படப்பை, ஒரகடம், தாம்பரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தவிர, வளத்தாஞ்சேரி, கண்ணந்தாங்கல், குண்டுபெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்த சாலையில், வளத்தாஞ்சேரி அருகே சிறுபாலத்தின் இருப்புறமும் தடுப்பு இல்லை.இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் தடுப்பு இல்லாத சிறுபாலத்தின் மீது செல்லும் போது, எதிர்பாரத விதமாக கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.மேலும், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, கால்வாயில் விழுந்து விபத்து ஏற்படும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.