வனத்துறை வளர்க்கும் தைல மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி சாய்ப்பு
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 380 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில், நீர் பிடிப்பு அல்லாத பகுதிகளில் 2 லட்சம் தைலம், நீர் மருது, நாவல், வெள்ளை கருவேலம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வனத் துறையினர் வளர்த்து வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரம் தாலுகா, மேல் பொடவூர், மடப்புரம், தொடூர். வாலாஜாபாத் தாலுகாவில் ஊத்துக்காடு, புத்தகரம், கரூர். உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் உள்ளிட்ட பல்வேறு தாலுகா ஏரிகளில் தைல மரங்கள் வளர்க்கப்படுகின்றன.இதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில், குறிப்பிட்ட சதவீதம் அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில், மேல்பொடவூர், மடப்புரம், தொடூர், ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளில், தைல மரங்களை, மர்ம நபர்கள் வெட்டி எடுத்து செல்கின்றனர். ஒரு சிலர் மரங்களை வெட்டி சாய்த்து விட்டு செல்கின்றனர்.இதனால், வனத்துறையினர் மரங்கள் திருடு போவதோடு, ஊராட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட ஏரிகளில் ஆய்வு செய்து, மரங்களை வெட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.