குன்றத்துார், மாங்காடில் தேசிய பேரிடர் மீட்பு படையினர்: கலெக்டர்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், மாங்காடு பகுதியில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் தயாராக உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கி தீவிரமாக பெய்து வரும் நிலையில், அனைத்து நிலை அதிகாரிகளும், களத்தில் இறங்கி முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தீயணைப்பு, வருவாய், போலீசார், உள்ளாட்சி, மின்வாரியம் என, 11 துறை அதிகாரிகள் கொண்ட 21 மண்டல குழுக்கள் மாவட்டம் முழுதும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த குழுவில் உள்ள அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், இரு நாட்களாக பணியாற்றி வருகின்றனர். மழை, வெள்ள பாதிப்புகள் கண்டறியபட்டால், அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைப்பதும், உணவு, பால் போன்ற பொருட்களை வழங்கி உதவும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தாலுகாக்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் நேற்று ஏற்படவில்லை.ஆனால், குன்றத்துார் தாலுகாவில் உள்ள கொளப்பாக்கம், வரதராஜபுரம், மவுலிவாக்கம், ராயப்பா நகர், அடையாறு ஒட்டியுள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து அப்பகுதியினர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.பருவமழை துவங்கும் முன், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கைகொடுக்கும் என, மாவட்டத்தின் உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், மாங்காடு பகுதியில் மட்டும் 20 படகுகள் நேற்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.தேசிய பேரிடர் மீட்பு படையினர், இரு குழுவாக, 50 பேரும், மாநில பேரிடர் மீட்பு படையினர், 51 பேரும் நேற்று, குன்றத்துார் பகுதியில் களத்தில் இருந்தனர்.இதுமட்டுமல்லாமல், பேரிடர் கால பயிற்சி பெற்றவர்கள், 43 பேரும், 79 மீட்பு பணி அலுவலர்களும், 974 முதல்நிலை பொறுப்பாளர்களும், 500 தன்னார்வலர்களும், 120 தேசிய மாணவர் படையினரும் தயாராக உள்ளனர்.இதுமட்டுமல்லாமல், 30 ஜெனரேட்டர்கள், 43 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 250 மோட்டார் பம்புகள், 15,180 மணல் மூட்டைகள், 1400 சவுக்கு கம்புகள், 276 ஜே.சி.பி., வாகனங்கள், 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 154 லைப் ஜாக்கெட்டுகள், 204 டார்ச் லைட்டுகள் ஆகியவை தயாராக வைத்துள்ளனர்.மேலும், 1,200 கி.மீ., துாரத்திற்கு மாவட்டம் முழுதும் மழைநீர் வடிகால் துார்வாரப்பட்டுள்ளன. 2.585 சிறுபாலங்கள், 38 பாலங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 76.2 கி.மீ., துாரத்திற்கும் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு, நீர்வரத்து தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டிருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.