கோவிலில் வழிபாடு குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம்கடல்மங்கலம் கிராமத்தில், 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, 40- ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், அப்பகுதியை சேர்ந்தோர், அவ்வப்போது வழிபாடு செய்து வந்தனர்.நான்கு ஆண்டுகளுக்கு முன், சிலர் கோவிலை சொந்தம் கொண்டாடி, பூட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராமவாசிகள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில், ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.நேற்று முன்தினம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராமவாசிகள், பூட்டிக் கிடந்த கோவிலை திறந்து வழிபாடு செய்தனர். இதையறிந்த எதிர்தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.தகவலறிந்த, உத்திரமேரூர் வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பேச்சு நடத்தினர். அதன்பின், இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் தேன்மொழி, நேற்று காலை 11:00 மணியளவில், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடத்தினார். ஆனால், இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்படாததால், பேச்சு தோல்வியில் முடிந்தது.இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:ஊருக்கு சொந்தமான பொதுக்கோவிலை ஒரு சிலர் உரிமை கொண்டாடி வருவது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சில், எந்த முடிவும் எட்டப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.