விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு ரூ.1.18 கோடியில் புதிய கட்டடம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் இயங்கும் காஞ்சி தாலுகா, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி ஆகிய மூன்று காவல் நிலையங்களில், தாலுகா மற்றும் சிவகாஞ்சி காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் சமீபத்திய ஆண்டுகளில் கட்டி பயன்பாட்டில் உள்ளன.ஆனால், போதிய இடவசதியின்றி விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்காவல் நிலையம், 1928ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் கட்டப்பட்டது.இந்நிலையில், புதிதாக காவல் நிலையம் கட்டுவது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பியதின்படி, 2024ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, முதல்வர் ஸ்டாலின், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு, 1.48 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்.புதிய கட்டடம் கட்டுவதற்கான, 'டெண்டர்' பணிகளை, காவலர் வீட்டு வசதி கழகம் துவக்கியுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கு, 1.18 கோடி ரூபாய் தோராய மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விடப்பட்டுள்ளது.டெண்டர் பணிகளை முடித்த பின், கட்டுமான பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வாளர் அறை, கைதிகளுக்கான சிறை, பாதுகாப்பு அறைகள், வரவேற்பறை, ஆயுத அறை, கழிப்பறை, வாகன நிறுத்தம் என, பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன.