உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செயல்படாத பொது சேவை மையங்கள் ஆன்லைன் சேவைக்கு பகுதியினர் அலைச்சல்

செயல்படாத பொது சேவை மையங்கள் ஆன்லைன் சேவைக்கு பகுதியினர் அலைச்சல்

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிராம ஊராட்சிகளில் உள்ள சேவை மையங்கள் முறையாக செயல்படுத்தாதால், ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை உடனுக்குடன் பெற முடியாமல், நகர் பகுதிகளுக்கு அலைய வேண்டி உள்ளதாக பல தரப்பு மக்களும் புலம்பி வருகின்றனர். அரசு சார்பில் வழங்கப்படும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா, சிட்டா உள்ளிட்டவை கடந்த ஆண்டுகளில், கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொது சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் வழங்கப்பட்டு வந்தன. இந்த சேவைகளை கிராம அளவில் கொண்டு செல்ல அரசு தீர்மானித்தது. இதற்காக 2013-14ம் ஆண்டில், ஊராட்சிகள் தோறும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டன.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும் கிராம சேவை மைய கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சான்றுகள் மட்டுமின்றி, ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி இனங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தொடர்பான அனைத்து பணிகளையும், கிராம வாசிகள் இந்த மையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால், அலைச்சல் இல்லாமல் தங்களது வசிப்பிட பகுதியிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து வகை சான்றுகள் கிடைக்கும் என, கிராம வாசிகள் நிம்மதி அடைந்தனர். ஆனால், மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில், இக்கட்டடம் செயல்பாடு இல்லாமல் தற்போது மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு பொது மக்கள் எப்போதும் போல வட்ட அளவிலான பொது சேவை மையங்களுக்கும், தனியார் இ- சேவை மையங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால், இத்திட்ட நோக்கம் வெற்றி பெறாமல் பயன் இல்லாத வகையில் உள்ளது. எனவே, ஊராட்சிகளில் உள்ள சேவை மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, உடனுக்குடன் அனைத்து வகை சான்றுகள் எளிதாக கிடைக்கவும், பொது மக்களின் அலைச்சலை குறைக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை