பணிகள் மேற்கொள்ளாத சாலைக்கு ரூ.8.77 லட்சம் மதிப்பில் அறிவிப்பு பலகை
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், தத்தணுார் ஊராட்சிக்குட்பட்ட கைவல்யம் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் கைவல்லியம் நகர் பிரதான சாலையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், 8.77 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த சாலையை, மெட்டல் சாலையாக சீரமைக்கப்பட்டதாக, இப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.ஜல்லி பெயர்ந்த சாலை அப்படியே இருக்கும் நிலையில், 8.77 லட்சம் ரூபாய் மதிப்பில் அறிவிப்பு வைக்கப்பட்டது அப்பகுதியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:கிராம பகுதிகளின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் 30க்கும் மேற்பட்ட திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கி, பல்வேறு பணிகளை முன்னெடுக்கின்றன.அதன்படி, சாலைகள் புனரமைப்பு, வடிகால் அமைத்தல், குடிநீர் வசதி, சுகாதார மையங்கள், அரசு அலுவலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கெள்ளப்படுகின்றன.ஆனால், உள்ளாட்சி பிரதிநிதிகள் அதை முறையாக செயல்படுத்தாமல், முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதை கண்காணிக்க வேண்டிய, வட்டார வளர்ச்சி அதிகாரிகரிகளும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.கைவல்யம் நகர் சாலையை, 8.77 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டதாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், ஒப்பந்ததாரர் பெயர், பணி துவங்கி நாள், பணி முடிந்த நாள் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லாமல் வைக்கப்பட்டுள்ளது.இது போன்று ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது.மாவட்ட கலெக்டர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஊராட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.