கோவில் நில வாடகை உயர்வை எதிர்த்து ஆட்சேபனை மனு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள அரசாந்தோட்டம் தெருவில், கச்சபேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 100க்கும் மேற்பட்டோர் வாடகைக்கு குடியிருக்கின்றனர்.இவர்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக, அங்கு வசித்து வரும் நிலையில், கோவிலுக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் வாடகை அதிகரிப்பதாக ஏற்கனவே அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், 980 ரூபாயாக இருந்த கோவில் நில வாடகை, 1,900 ரூபாயாக உயர்த்தியதை கண்டித்து, அப்பகுதியினர் நேற்று ஆட்சேபனை தெரிவித்து, கோவில் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.வாடகை உயர்வு கட்டணம், 27 மாதங்கள் முன் தேதியிட்டு, கணக்கீடு செய்வதையும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.நெசவாளர்கள் பெருமளவில் வசிக்கின்ற அப்பகுதியில், வாடகை உயர்வு பொருளாதார ரீதியில் பாதிக்கும் என குற்றஞ்சாட்டுகின்றனர்.கச்சபேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை கமிஷனர் ஆகியோரிடம் தங்களது ஆட்சேபனை மனுவை, 50க்கும் மேற்பட்டோர் நேற்று வழங்கினர்.