கழிவுநீர் கால்வாயில் அடைப்பு செவிலிமேடில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பாட்டை தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் செடி, கொடி, புதர் மண்டியுள்ளது. மண்திட்டுகளாலும் அடைப்பு ஏற்பட்டு, கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயில் தேங்கியுள்ளது. அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாகவும் பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, செவிலிமேடு பாட்டை தெருவில் உள்ள கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.